இலங்கை தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாத புதிய கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
*********************************************
தமிழ் இராச்சியத்தின் தோற்றம் பற்றிய முன்னைய வரலாற்று பார்வையை மீள்வாசிப்பிற்கு உற்படுத்தும் அரிய தமிழ் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டு இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் கூறுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு.
அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன.
அவை இலக்கியங்களைப் போல் விரிவான வரலாற்றுச் செய்திகளைத் தராவிட்டாலும் அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த சமகாலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதினால் அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமானதாகவே பார்க்கப்படுகின்றன.
இவை ஒரு நாட்டில் வாழும் பல இன மக்கள் பற்றிய பாரம்பரிய வரலாற்று நம்பிக்கைகளை மீளாய்வு செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதற்கு திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய செய்தி திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் (J.S.Arulraj) என்பவரால் வைத்திய கலாநிதி த.ஜீவராஜிக்கு (T. Jeevaraj) தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் அது பற்றிய தகவல் எமக்கும் பரிமாறப்பட்டது.
அவர்கள் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்து இக்கல்வெட்டின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்ட நாம் அக்கல்வெட்டை ஆய்வு செய்வதற்கு தொல்லியற் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று யாழ்ப்பாணப் பிராந்திய தொல்லியற் திணைக்கள ஆய்வு உத்தியோகத்தர்களான பா.கபிலன், வி. மணிமாறன் மற்றும் முன்னாள் தொல்லியல் விரிவுரையாளர் க.கிரிகரன் ஆகியோருடன் 30.01 2021 அன்று திருகோணமலை சென்றிருந்தோம்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்ட வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் வைத்திய கலாநிதி த.ஜீவராஜூடன் வைத்திய கலாநிதி அ.ஸதீஸ்குமார், கிராம உத்தியோகத்தர் நா.சந்திரசேகரம் மற்றும் கோமரன்கடவல பிரதேச செயலக உத்தியோகத்தர் நா.ஜெகராஜ் ஆகியோரும் கல்வெட்டைப் படியெடுக்கும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றியமை எமக்கு மனமகிழ்வைத் தந்ததுடன், அச்சமற்ற சூழ்நிலையில் இக்கல்வெட்டைப் படியெடுக்கவும் வாய்ப்பாக இருந்தது.
இக்கல்வெட்டு திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில் திருகோணமலை மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகின்றது.
முன்னர் இப்பிரதேசம் கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது இந்த இடம் குமரன்கடவை எனவும் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டிட அத்திவாரங்களும் காணப்படுகின்றன.
அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகின்றது.
இம்மலையின் மேல்பகுதியில் திருவாசிபோன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம் சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிடுகின்றார்.
இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு வரிகளும், ஏனைய வற்றில் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன.
கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும், தெளிவற்றும் காணப்படுகின்றன.
இடப்பக்க எழுத்துப் பொறிப்புக்கள் தெளிவாகக் காணப்பட்டதால் கல்வெட்டைப் படியெடுத்தவர்கள் ஆர்வமிகுதியால் பல சொற்களைப் படித்தனர்.
ஆயினும் கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதனால் தென்னாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரும், எனது கலாநிதிப்பட்ட ஆய்வு மேற்பார்வையாளருமான பேராசிரியர் வை.சுப்பராயலுவுக்கும், தமிழக தொல்லியற் துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டறிஞரான கலாநிதி சு.இராஜகோபாலுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன்.
அவர்கள் இருவரும் ஒருவார காலமாக கடும் முயற்சி செய்து கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வாசகத்தை தற்போது எமக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் வாசகம் பின்வருமாறு:
01)... ... க்ஷகே ஸ்ரீவிம்[ங்கோ3] நௌ ம்ருகே3 விம்ச0 திப4.
02).... .....ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ ...
03) [த்திகள்?] [ஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழ[ம
04) ண்டலமான மும்முடி] சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-
05) ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-
06) [நேமி பூசை கால]ங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-
07) [யிலை]யுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-
08) நாற்கு ச0[க்தி] ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா
09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்
10) ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[துஸ நாட்டில் ல-
11) ச்சிகா[தி]புரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-
12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய
13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட
14) இந்நா[ச்சியார்க்கு திருபப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-
15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-
16) ண்ணிக் குடுத்தேன்இ .... லுள்ளாரழிவு படாமல்
17) ...ண்ண..ட்ட......ப் பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய்
18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்
19) மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்
20) குரால் பசுவைக் கொன்றா[ர்பாவங்] கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-
21) ஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு ...
22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] ... ...
23) த்தியஞ் செய்வார் செய்வித்தார்
கி.பி.13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரியவந்துள்ளன.
அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.
மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
இக்கல்வெட்டுப் படியெடுத்த காலப்பகுதியிலேயே இக்கல்வெட்டின் புகைப்படங்களை எனது ஆசிரியர்களான பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் பொ.இரகுபதி ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக்களைப் பெற்றிருந்தேன்.
பேராசிரியர் இரகுபதியால் கல்வெட்டின் சில பாகங்கள் வாசிக்கப்பட்டு அதற்குரிய பொருள் விளக்கத்தையும் அவர் அவ்வப்போது எனக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அறிஞர்களால் பெருமளவு வாசித்து முடிக்கப்பட்ட கல்வெட்டு வாசகத்திற்கு மேற்கூறிய அனைவருமே வழங்கிய கருத்துக்கள், விளக்கங்கள் என்பன இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதிய செய்திகளைச் சொல்வதாக உள்ளன.
தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்கள் இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர்.
இது முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப் பின்னர் இராஜராஜசோழன் காலத்தில் கி.பி. 993 இல் இலங்கைளின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது.
கி.பி. 1012 இல் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம்.
சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் அவர்களது நிர்வாக முறையே பின்பற்றப்பட்டது.
இதன்படி இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.
திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.
அத்துடன் சோழரின் அரசியல், இராணுவ, நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திருகோணமலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.
இதை உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன்கடவலக் கல்வெட்டுக் காணப்படுகின்றது.
பொலன்னறுவையில் சிங்கள மன்னர்களின் ஆட்சி ஏற்பட்டு ஏறத்தாழ 125 ஆண்டுகளின் பின்னரும் தமிழர் பிராந்தியங்களில் மும்முடிச் சோழ மண்டலம் என்ற நிர்வாகப் பெயரும், தமிழ் நிர்வாக முறையும் இருந்தன என்ற புதிய செய்தியை இக்கல்வெட்டுத் தருகின்றது.
கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில், சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்கசோழக் காலிங்கராயன் இருந்துள்ளான் என்ற புதிய செய்தியும் தெரியவருகின்றது.
மேலும் இவனே கங்கராஜகாலிங்க விஜயபாகுவிற்கு (கலிங்கமாகனுக்கு) பட்டாபிஷேகம் செய்தான் என்ற அதிமுக்கிய புதிய வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டிலேயே முதல் முறையாகச் சொல்லப்பட்டுள்ளது.
பேராசிரியர்.சுப்பராயலு இக்கல்வெட்டில் (வரிகள் (3-5) வரும் 'ஸ்ரீகுலோத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழமண்டலமான மும்முடி சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம்' என்ற சொற்தொடரை புதிய செய்தி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் இந்திரபாலா இத்தொடரில் உள்ள கங்கராஜ காலிங்கவிஜயவாகு என்பவன் 1215 இல் பொலன்னறுவை அரசை வெற்றி கொண்டு ஆட்சி செய்த கலிங்கமாகன் (மாகன் மாகோன்) என அடையாளப்படுத்துகின்றார்.
அவன் விஜயபாகு என்ற பெயராலும் அழைக்கப்பட்டான் என்பதற்கு 14ஆம் நூற்றாண்டில் எழுந்த நிகாயசங்கிரஹய என்ற சிங்கள இலக்கியத்தில் வரும் குறிப்பை முக்கிய ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
இவற்றிலிருந்து, இலங்கையை வெற்றிகொண்டு பொலன்னறுவையில் ஆட்சிபுரிந்த கலிங்கமாகன், குலோத்துங்கசோழ காலிங்கராயனால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்பட்டவன் என்ற புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.
இக்கல்வெட்டில் கூறப்படும் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்த சோழப்படைத் தளபதியாக அல்லது சோழ அரசப் பிரநிதியாக இருந்திருக்கவேண்டும்.
ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் (கி.பி 1178-1218) அவன் இலங்கை மீது படையெடுத்து சில வெற்றிகளைப் பெற்றதாக அவனது பத்தாவது ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது.
இங்கே கலிங்கமாகன் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி.1215 இல் வெற்றி கொண்டான் எனக் கூறப்படுகிறது.
இதனால் குலோத்துங்க சோழ காலிங்கராயனால் கலிங்கமாகனுக்கு நடத்தப்பட்ட பட்டாபிஷேகம் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் நடந்ததெனக் கூறமுடியும்.
பொலன்னறுவை இராசதானியில் நிஸங்கமல்லன் ஆட்சியைத் தொடர்ந்து பல குழப்பங்களும், அயல்நாட்டுப் படையெடுப்புக்களும் ஏற்பட்டதை பாளி சிங்கள இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில் சோழ, கேரள, தமிழ்ப்படை வீரர்களின் உதவியுடன் இலங்கை மீது படையெடுத்து வந்த கலிங்கமாகன் 1215 இல் பொலன்னறுவை இராசதானியைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது.
இவனது ஆட்சியில் வெறுப்படைந்த சிங்கள மக்களும், சிங்கள தலைநகரும் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த போது கலிங்கமாகன் தலைமையில் வடக்கே இன்னொரு அரசு தோன்றியதாக சூளவம்சம், ராஜவெலிய முதலான வரலாற்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இக்கலிங்கமாகன் யார்? எந்த நாட்டிலிருந்து படையெடுத்து வந்தவன் என்பதையிட்டு இதுவரை அறிஞர்கள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்களே இருந்துள்ளன.
சில அறிஞர்கள் இவனை மலேசியா நாட்டிலுள்ள கலிங்கத்திலிருந்து படையெடுத்தவன் எனவும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டில் கலிங்கமாகன் கங்கை வம்சத்துடனும், கலிங்க நாட்டுடனும் தொடர்புடையவன் என்ற புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சோழர்கள் தம் திருமண உறவுகளால் கீழைச்சாளுக்கியரது (வேங்கி அரசு) கங்கை வம்சத்துடனும், படையெடுப்புகள் மூலம் கலிங்க நாட்டுடனும் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதைக் கலிங்கத்துப்பரணியும், சோழக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தில் அரசமைத்த ஆரியச்சக்கரவர்த்திகளும் கங்கை வம்சத்துடன் தொடர்புடையவர்கள் என அவ்வரசு தொடர்பாக எழுந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
இவ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண அரசின் தோற்றத்தை கலிங்கமாகனுடன் தொடர்புபடுத்தி பேராசிரியர் இந்திரபாலாவினால் எழுதப்பட்ட அரிய கட்டுரை ஒன்று தற்போது எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கட்டுரையை மக்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இலங்கை ஊடகங்களில் விரைவில் பிரசுரமாக இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டின் 8-10 வரிகளில் வரும் 'திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பண்ணுவித்து' என்ற சொற்தொடர் இப்பிரதேசத்தில் சக்திக்கென தனிக்கோவில்(காமக்கோட்டம்) அமைக்கப்பட்ட புதிய செய்தியைக் கூறுவதாக உள்ளது.
பேராசிரியர் பத்மநாதன் இது போன்ற செய்தி இலங்கையில் கிடைத்த பிற தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை காணப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார்.
தமிழகத்தில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் இருந்து சிவன் கோயிலுக்குப் பக்கத்தில் சக்திக்கு தனிக்கோயில் அமைக்கும் மரபு இருந்தமை தெரிகின்றது .
அம்மரபு சமகாலத்தில் இலங்கையிலும் பின்பற்றப்பட்டமைக்கு இக்கல்வெட்டு சான்றாகும்.
கோமரன்கடவல சிவன் கோயில் குலோத்துங்கசோழக் காலிங்கராயன் காலத்திற்கு முன்பே பன்நெடுங்காலமாக இருந்திருக்கின்றது என்பதும் கல்வெட்டில் வரும் ஆதிக்ஷேத்ரம் என்ற சொற்தொடரால் தெரிகின்றது.
காலிங்கராயன் ஈழத்தை வெற்றி கொண்டதற்கும் கலிங்கமாகனுக்குப் பட்டம் சூட்டியதற்கும் பிறகு இக்கோயிலுக்கு வந்து வழிபட்டு, சக்திக்காக தனிக்கோயில் எடுப்பித்து, தனக்கு சொந்தமாகக் கிடைத்த நிர்வாகப் பிரிவில் இருந்து சில நிலங்களை நிவந்தமாக கொடுத்தமையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
இந்த நிலங்களுக்கும் கோயில் நிர்வாகத்திறகும் உரித்துடையவர்களாக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் காலிங்கராயன் சொற்படி இக்கல்வெட்டை பொறித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கல்வெட்டின் ஓம்படைக்கிளவியில் குலோத்துங்கசோழக் காலிங்கராயனின் இந்த ஏற்பாடுகளுக்குப் பங்கம் செய்பவர்கள் கங்கைக் கரையில் ஆயிரம் குரால் (கபிலை) பசுக்களை கொன்ற பாவத்திற்கும், ஆயிரம் பிராமணர்களைக் கொன்ற பாவத்திற்கும் உட்பட்டு நாயாகவும், காகமாகவும் பிறப்பார்கள் எனக் குறிப்பிட்டு அவற்றின் உருவங்களும் கல்வெட்டுப் பொறிப்புக்கு கீழே கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.
இக்கல்வெட்டால் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு, அவற்றில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும், விளக்கங்ளும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.
முதலில் ''ஸ்வயம்புவுமாந திருக்கோ (ணமலை) யுடைய நாயநாரை' என படிக்கப்பட்டதை பேராசிரியர் இரகுபதி 'ஸ்வயம்புவுமாந திருக்கோயிலுடைய நாயநாரை' எனப் படித்திருப்பதை பேராசிரியர் சுப்பராயலு பொருத்தமானதென எடுத்துக்கொண்டுள்ளார்.
இச்சிவாலயத்தில் காணப்படும் சிவலிங்கத்தின் அமைப்பு ஸ்வயம்பு என்ற சொல்லுக்குப் பொருத்தமாக இருப்பதினால் இக்கல்வெட்டு இந்தக்கோயிலையே குறிப்பிடுகின்றது என்பது பேராசிரியர் இரகுபதியின் விளக்கமாகும்.
மேலும் அவர் கல்வெட்டில் வரும் இடப்பெயரை 'லச்சிகாமபுரம்' என வாசித்து அது இப்பிரதேசத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தின் பெயர் எனக் குறிப்பிடுகின்றார்.
இதில் வரும் வேச்சார் நிலம் என்பது குளத்தோடு ஒட்டிய பயிர் நிலம் என்ற பொருளில் சிங்களக் கல்வெட்டுக்களில் வரும் வேசர(வாவி சார்ந்த) என்ற சொல்லுடன் தொடர்புடையது என்பதும் அவரது கருத்தாகும்.
பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டில் வரும் 'மாநாமத்துநாடு' என்ற பெயர் இங்குள்ள பரந்த பிரதேசத்தை குறித்த இடமாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.
இக்கூற்றை பொருத்தமாக கருதும் பேராசிரியர் பத்மநாதன் இதற்குப் பெரியகுளம் கல்வெட்டில் வரும் இதையொத்த பெயரை ஆதாரமாகக் காட்டுகின்றார்.
இக்கல்வெட்டில் 'பற்று' என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இப்பெயர் சோழர் ஆட்சியில் வளநாடு என்ற நிர்வாகப் பிரிவிற்குச் சமமாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனப் பேராசிரியர் பத்மநாதன் கருதுகின்றார்.
பற்று என்ற தமிழ்ச் சொல் சிங்களத்தில் 'பத்து' என அழைக்கப்படுகின்றது.
இச்சொற்கள் தற்காலத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இக்கல்வெட்டைப் படியெடுத்த போது கடும் மழையாக இருந்ததாலும், பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் இங்குள்ள காட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதாலும் குறுகிய நேரத்திற்குள் இக்கல்வெட்டை படியெடுக்க வேண்டியிருந்தது.
ஆயினும் மீண்டும் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருப்பதால் மேலும் பல புதிய தகவல்கள் வெளிவரக்கூடும்.
இவ்விடத்தில் இக்கல்வெட்டைப் படிப்பதற்கும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொண்டுவரவும் உதவிய என் ஆசிரியர்களுக்கும், எனது தொல்லியல் பட்டதாரி மாணவர்களுக்கும், ஆய்விடத்தை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் எம்முடன் இணைந்து பணியாற்றிய திருகோணமலை நண்பர்களுக்கும் என் நன்றிகள் என அவர் தெரிவித்துள்ளார்
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0unBLieEjMJt7Ry3QVc2yE7cPLccGU6rgQQLCyESPe5kSZQYJM5Ep2DxU32gv3odEl&id=100070494699232&mibextid=Nif5oz
தொகுப்பு
ஈழத்து வரலாறும் தொல்லியலும்