Tuesday, 4 April 2023

தமிழ் மன்னர்களும் யாழ்ப்பாணக் கோட்டையும் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

தமிழ் மன்னர்களும் யாழ்ப்பாணக் கோட்டையும் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

ஈழத்து வரலாறும் தொல்லியலும்  

இலங்கையின் முதல் வரலாற்றுப் பாளி இலக்கியங்களில் ஒன்றான மகாவம்சத்தில் நாகதீபம் எனவும், தமிழ் இலக்கியங்களில் ஒன்றான மணிமேகலையில் நாகநாடு எனவும் அழைக்கப்பட்ட இன்றைய யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்குத் தொன்மையான தொடர்ச்சி குன்றாத பாரம்பரிய வரலாறு உண்டு. 


வரலாற்றுத் தொடக்ககாலத்தில் இப் பிராந்தியத்தில் வாழ்ந்தமக்கள் தமிழ்மொழியைப் பேசினர் என்பதை ஆனைக்கோட்டை, பூநகரி ஆகிய இடங்களில் கிடைத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருந்தும் இலங்கையின் ஏனைய பாகங்களில் அரச ஆதரவில் மேற்கொள்ளப்பட்டது போன்ற தொல்லியல் ஆய்வுகள் இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படவில்லை. தனிப்பட்ட சிலரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் கூட சரிவரப் பாதுகாக்கப்படாமை முக்கிய குறைபாடாகும்.


13 ஆம் நூற்றாண்டில் ஒரு மன்னன் ஆளுகைக்குட்பட்ட சுதந்திரத் தமிழரசொன்று யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு உதயமானது இவ்வரசின் ஆதிக்கம் யாழ்ப்பாணக்குடா நாடு உட்பட கிழக்குமாகாணத்தின் பெரும் பகுதிவரை பரந்திருந்தது. இக்காலத்தில் யாப்பகுவ, குருநாகல், கம்பளை அரசுகள் தென்னிலங்கையில் இருந்த போதும் அவைகளைக் காட்டிலும் யாழ்ப்பாண அரசு படைப்பலத்திலும், பொருள் வளத்திலும் மேலோங்கிக் காணப்பட்டதாக நிகாயசங்கிரகய, இராஜவலிய முதலான சிங்கள நூல்கள் கூறுகின்றன. 


கி.பி. 1358 இல் கம்பளை இராச்சியத்தில் ஏற்பட்ட காலத்தில் மூன்றாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண மன்னனின் உதவியை நாடினான். இதன் பொருட்டு அம்மன்னன் கம்பளையைச் சேர்ந்த சில பகுதிகளை யாழ்ப்பாண மன்னனுக்குக் கொடுத்தான்.ஈழத்து வரலாறும் தொல்லியலும் .கோட்டகம என்றஇடத்தில் கிடைத்த 14 ஆம் நூற்றாண்டுக்குரிய தமிழ்க்கல்வெட்டு ஒன்று யாழ்ப்பாண மன்னனின் படைகள் மலைநாடு புகுந்து அங்கு ஆட்சியிலிருந்த சிங்கள் அரசன் ஒருவனைத் தோற்கடித்தது பற்றிக் கூறுகிறது. இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இராஜவலிய என்ற சிங்கள நூல் மலைநாடு, கரையோரம் உட்பட ஒன்பது துறைமுகங்களில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் திறை பெற்றதாக கூறுகிறது. பேராசிரியர் கே. எம். டி. சில்வா என்ற அறிஞர் தென்னிந்தியப் படையெடுப்புகள் யாழ்ப்பாண அரசிற்கு அச்சுறுத்தலாக அமையாவிட்டால் தென்னிலங்கை முழுவதும் யாழ்ப்பாண அரசின் ஆதிக்கத்திற்குள் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, மத்தியகால இலங்கை வரலாற்றில் சீரும் சிறப்பும் பெற்ற நல்லூர் இராசதானி அமைந்த பிராந்தியத்திற்கு கந்தரோடை, வல்லிபுரம் போன்ற இடங்களைப் போலத் தொன்மையான பாரம்பரிய வரலாறு இருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்து கொள்ளக் கூடியளவிற்கு இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டதாகவும் கூறுவதற்கில்லை.ஈழத்துவரலாறும்தொல்லியலும்  இதனால் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் மத்திய காலத்தில் இப்பிரதேசம் சிறப்புப் பெற்றதற்குத் தமிழ் மன்னர்களின் இராசதானி இந்நகரில் அமைந்ததே காரணம் எனக் கருதுகின்றனர். ஆனால் சமீபத்தில் நல்லூரிற் கிடைத்த 'லஷ்மி' நாணயமும் இதற்குச் சற்றுத் தென்மேற்கே பூம்புகார்.மணியந்தோட்டம் ஆகிய இடங்களிற் கண்டு பிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகளுக்குரிய சான்றுகளும் கந்தரோடை, வல்லிபுரம் போன்ற நகரங்களுக்கு உள்ளவை போன்ற பாரம்பரிய வரலாறு நல்லூருக்கும் இருந்திருக்கலாம் எனக் கருத இடம் அளிக்கின்றன. 

இதேபோல் அன்னியரின் நினைவுச் சின்னமாக உள்ள யாழ்ப்பாணக் கோட்டையும், அதைச் சூழவர உள்ள இடங்களும் வரலாற்றிற் சிறப்புப் பெற்றமைக்கு நல்லூர் இராசதானியின் வீழ்ச்சிக்கு ஏதுவாய் இருந்த போத்துக்கேயரும் பின்வந்த ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால ஆட்சியுமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவற்றுள்  கோட்டையின் அமைப்பும் அதன் கலைமரபும் நல்லூரில் உள்ள மந்திரிமனை, கற்றோரணவாசல் முதலியனவற்றைப் போல் அன்னியருக்குரிய தென்பதில் ஐயமில்லை. ஆனால் இவ்விடத்தில் இக் கோட்டை கட்டப்பட்டமைக்கு அன்னியர் தான் முதலில் காரணமாக இருந்தார்களா அல்லது இவர்களுக்கு முன்னரே தமிழ்மன்னர்களுடைய கோட்டை இவ்விடத்தில் இருந்தது தான் காரணமா? ஆய்வுக்குரிய விடயமாகும். என்பது

இக்கோட்டை அமைந்த சுற்றாடலின் அமைவிடத்தையும், இவ்விடத்துடன் கடல் வழித்தொடர்பு கொள்ளக் கூடிய பண்ணைத்துறை, நாவாந்துறை. அராலித்துறை, ஊர்காவற்துறை, கொழும்புத்துறை போன்ற டங்களையும் நோக்கும்போது ஆதிகால வெளிநாட்டு வர்த்தகத்தில் இவ்விடமும் தொடர்பு கொண்டிருந்ததெனக் கூறலாம். கோட்டைப் பகுதியிற் கண்டு பிடிக்கப்பட்ட உரோம நாணயமும், இதற்குச் சற்றுத் தென்மேற்கே வேலணை, மண்கும்பான், சாட்டி போன்ற இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதிக்குடியிருப்புகள் பற்றிய சான்றுகளும் உரோம நாணயங்களும், உரோம மட்பாண்டங்களும், அரேபிய, கிரேக்க, சீன மட்பாண்டங்களும் ஆதியில் இவ்விடங்களுடன் தென்னிந்திய, கிரேக்க, உரோம, அரேபிய, சீனத் தொடர்புகள் இருந்தமைக்குச் சான்றாகும்.


இவ்விடங்கள் பத்தாம் நூற்றாண்டிற் சோழர் ஆட்சியுடன் மேலும் முக்கிய வர்த்தக நடவடிக்கைப் பிரதேசமாக விளங்கியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. தமிழ் நாட்டிற்குக் கிட்டவுள்ள இவ்விடங்களைச் சோழர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் மேற்கில் இருந்து ஏற்பட்ட அராபியரது வர்த்தக எழுச்சியைத் தடுக்கவும், இலங்கையின் பெரு நிலப்பகுதியிலிருந்து ஏற்பட்ட சிங்கள மன்னர்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும், கிழக்கே தென்கிழக்காசிய நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தவும் வாய்ப்பாக இருந்திருக்கும். ஈழத்துவரலாறும்தொல்லியலும் இதை உறுதிப்படுத்தக்கூடிய அதிக சான்றுகள் யாழ்ப்பாணத்தில் இது வரை கண்டு பிடிக்கப்படாவிட்டாலும், இங்கு பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால நாணயங்களும், சோழரை நினைவுபடுத்தும் செம்பியன்பற்று, வளவர் கோன் பள்ளம், கங்கைகொண்டான் போன்ற இடப்பெயர்களும் கமால் வீதி நாரந்தனை போன்ற இடங்களிற் கிடைத்த இவர்கள் காலச் சிற்பங்களும் இதை ஓரளவு உறுதிப்படுத்துகின்றன. இவற்றுட் கோட்டை அமைந்துள்ள இடம் சோழரின் முக்கிய வர்த்தகத் துறைமுகமாக அல்லது அவர்களின் பாதுகாப்பு மையமாக இருந்ததெனக் கருத இடமுண்டு.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட யாழ்ப்பாண மன்னர் கால ஆலயங்களையும் அரண்மனைகளையும் கொண்டு இவ்விடத்திற் புதிய கோட்டை கட்டப்பட்டாலும் அவை அனைத்தும் யாழ்ப்பாண மன்னர் காலத்திற்குரியவையெனக் கூறமுடியாது. இக்கோட்டையின் மேற்குப் புறப் பகுதியில் பழமையான கட்டிடங்களுக்குரிய கற்றூண்கள் காணப்படுகின்றன. அவற்றுட் சில. 10ஆம் நூற்றாண்டுக்குரிய கிரந்த எழுத்துக்களையும் கொண்டுள்ளன. இவை பிற்பட்ட பல்லவர் அல்லது முற்பட்ட சோழர் காலத்திற்குரியவையாகும். 


இக் கற்களை இன்னொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவையெனக் கருத இடமிருப்பினும், சிலவேளை இவ்விடத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் கற்களாகவும் இவற்றைக் கொள்ளலாம். இக்கோட்டையில் உள்ள இன்னொரு கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டில் இராசேந்திர சோழன் நல்லூரில் அமைத்த ஆலயம் ஒன்றுக்குத் தானம் அளித்தது பற்றிக் கூறுகிறது. இது தற்போதைய நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்கு முற்பட்டதான பழைய ஆலயத்தையோ அல்லது சோழர் காலத்தில் இங்கிருந்த இன்னொரு ஆலயத்தையோ குறித்திருக்கலாம் எனப்பலரும் கருதுகின்றனர். ஆனால் அக்காலத்தில் நல்லூர் என்ற பெயர் தற்போதைய நல்லூருக்கு இருந்ததற்கு ஆதாரமில்லை. இதேவேளை கோட்டை அமைந்துள்ள இடம் யாழ்ப்பாணம் எனக் குறிக்கப்பட்டதற்கும் ஆதாரமில்லை. இதனால் மேற் கூறப்பட்ட சோழர் கல்வெட்டில் வரும் நல்லூர் யாழ்ப்பாணத்தின் முன்னோடிப்பெயரா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. சோழர் ஆட்சியில் நல்லூர் என்ற பெயர் தமிழ்நாட்டின் பல இடங்களிற்கு இடப்பட்டதற்கு ஆதாரமுண்டு. இதே போல் இலங்கையில் அவர்களின் ஆட்சிக் குட்பட்ட திருகோணமலை, பூநகரி, களுத்துறை, குருநாகல் போன்ற இடங்களிலும் இப்பெயர்கள் உள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் கடற்கரையை அண்டிய துறைமுகங்களிலும் நகரங்களிலும் இருந்ததுடன் இவற்றில் முக்கிய வர்த்தக. பண்பாட்டு நடவடிக்கைகள் இருந்தமைக்கான ஆதாரங்களும் உள்ளன. 

இவற்றுள் திருகோணமலையிலும், பூநகரியிலும் இவர்கள் கால ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அப்படியாயின், கோட்டையில் இருந்த சோழக் கல்வெட்டை முன்பு இங்கிருந்த ஆலயத்தின் கல்வெட்டாகக் கருத இடமுண்டு. அவ்வாறு கருதுவதற்கு இன்னொரு ஆதாரத்தை இங்கு எடுத்துக் காட்டலாம். இக்கோட்டையின் வடக்காக உள்ள நிலப் பகுதி இன்று 'ஐநூற்றுவன் வளவு' என அழைக்கப்படுகிறது. 'ஐநூற்றுவன்' என்பது சோழர் காலத்திற்குரிய முக்கிய வணிகக் கணங்களில் ஒன்றாகும். ஈழத்துவரலாறும்தொல்லியலும் இவ் வணிகக் கணங்களே சோழர் காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் மட்டுமன்றிப் பல ஆலயங்களைக் கட்டுவதற்கும், நகரங்களை அமைப்பதற்கும் காரணமாக இருந்தன குறிப்பாக, பொலநறுவையிலும் பதவியாவிலும் உள்ள சில ஆலயங்களின் தோற்றம் வணிகக்கணங்களோடு தொடர்பு படுத்திக் கூறப்பட்டுள்ளது 

கோட்டையில் இருந்த சோழர் கல்வெட்டில், ஆலயத்திற்குத் தானம் கொடுத்தவனாக 'சாத்தன்' என்பவன் குறிப்பிடப்பட்டுள்ளான். சாத்தன் என்றால் வியாபாரிகள் கூட்டம் என்று பொருள்படும். பல சோழக் கல்வெட்டுக்களிலே தானம் அளித்தவன் பெயர்களில் சாத்தன் என்ற பெயர் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சோழர் கால ஆலயம் பற்றிய கல்வெட்டும், அவர் கால வணிகக்கணம் பற்றிய பெயரும் யாழ்ப்பாணக் கோட்டை அமைந்த பிரதேசத்துடன் தொடர்புடையனவாக இருப்பதினால் இக்கல்வெட்டில் வரும் ஆலயம் இங்கிருந்திருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. இச்சான்றுகளை நோக்கும் போது யாழ்ப்பாண ஆரியச்சக்கரவர்த்தி மன்னர் காலத்திற்கு முன்னரே சோழர் காலத்திலேயே தற்போதைய கோட்டை அமைந்துள்ள பிரதேசம் முக்கிய வர்த்தகப் பண்பாட்டு மையமாக விளங்கியதெனக் கூறலாம். இவ்விடமே பிற்காலத்தில் யாழ்ப்பாண மன்னர்களின் முக்கிய கோட்டையாக விளங்கியிருக்க வேண்டும்.

ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்கால அரண்மனைகளையும், ஆலயங்களையும் விபரித்துக் கூறும் 'யாழ்ப்பாண வைபவ மாலை' அவர்கள் காலக் கோட்டை பற்றியும் கூறுகிறது. செண்பகப் பெருமாள் படையெடுப்புப் பற்றிக் கூறும் 'இராஜ வலிய' என்ற சிங்கள நூல் யாழ்ப்பாணத் தில் இவன் அமைத்த காவல் அரண், கோட்டை என்பன பற்றியும் கூறுகிறது.ஈழத்து வரலாறும் தொல்லியலும்  இச்சான்றுகள் போர்த்துகேயருக்கு முன்னரே தமிழ் மன்னர் காலக்கோட்டை யொன்று யாழ்ப்பாணத்தில் இருந்ததென்பதை  உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறான கோட்டையொன்று இருந்ததென்பதை ஏற்றுக் கொண்டால், அது கடற்கரையை அண்டிய பகுதியாகவே இருந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஆரியச் சக்கரவர்த்தி மன்னன் ஒருவனின் வெற்றி பற்றிக் கூறும் கோட்டகம சாசனத்தில் வரும் பொங்கொலி நீர் சிங்கை நகர்' கூற்று இம்மன்னர்கால அரசிருக்கை அல்லது இராசதானியின் கட்டிடம் ஒன்று கடற்கரையை அண்டியிருக்கலாம் என்பதையும் உணர்த்துவதாகக் கருத்தில் எடுத்துக்கொள்ள இடமுண்டு.

தற்போதைய நிலையில் யாழ்ப்பாணக் கோட்டையைத் தவிர. யாழ்ப்பாணத்தின் கடற்கரையை அண்டிய ஏனைய பகுதியில் யாழ்ப்பாண மன்னர் காலத் தொல்பொருட்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் போர்த்துக்கேயருக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான போராட்டங்கள் பல கொழும்புத்துறைக்கும் பண்ணைத்துறைக்கும் இடையிலே நடந்ததாகத் தெரிகிறது. இவற்றை நோக்கும் போது யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டை தற்போதைய கோட்டை இருக்கும் பகுதியில் இருந்ததெனக் கூறலாம். அக்காலத்தில் இக்கோட்டை மிகப் பெரிதாக இருந்ததெனக் கூறமுடியாவிட்டாலும் பெருமளவிற்கு மண்ணையும் கல்லையும் கொண்டு கட்டப்பட்டிருந்ததெனக் கூறலாம். போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் இருந்த இந்து ஆலயங்களை இடித்து அதன் அருகே புதிய கத்தோலிக்கத் தேவாலயங்களைக் கட்டியபோதிலும், ஆரம்பத்தில் அவை களிமண் கொண்டு கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதேபோல் யாழ்ப்பாண மன்னர் காலக் கோட்டையை இடித்து அல்லது அதில் சில மாற்றங்களைச் செய்து போர்த்துக்கேயர் தமது கோட்டையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் இதையே பின்னர் வந்த ஒல்லாந்தர் தற்போதைய நிலையில் கட்டி முடித்தனர்.  கோட்டையைச் சரிவர ஆராய்ந்தால் யாழ்ப்பாண கோட்டைக்கும் யாழ்ப்பாண மன்னர்களுக்கும் இடையிலான தொடர்பு மேலும் துலக்கம் பெறும்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02U6sywe1ykAL3SucM5YFRgLHtiKy1N38DnyQMysevuMfERZD6HtXZKyVCNWmtLzQJl&id=100070494699232&mibextid=Nif5oz

தொகுப்பு ஆக்கம்

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

கந்தசாமி கிரிகரன் 

 - வெளிச்சம் 1993

No comments:

Post a Comment

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு

சண்டிலிப்பாய் கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ********************************************** சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் நிர்வாகப் பி...